×

அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் சுவாமி வீதியுலா நடத்த முடிவு பக்தர்களை அனுமதிக்க கட்டுப்பாடுகள் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில்

திருவண்ணாமலை, நவ.12: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா சுவாமி வீதியுலாவை கோயில் 5ம் பிரகாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களை அனுமதிக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, இந்த ஆண்டு வரும் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, 29ம் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை மகா தீபமும் ஏற்றப்படும்.

இந்நிலையில், கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தீபத்திருவிழாவில் பங்கேற்க பக்தர்களை அனுமதிக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அரசின் ஒப்புதல் பெற்று இது தொடர்பான அறிவிப்பை 2 நாட்களில் கலெக்டர் வெளியிட இருக்கிறார். மேலும், வழக்கமான தீபத்திருவிழா வழிபாடுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபத்திருவிழா நடைபெறும் 10 நாட்களும் மாடவீதியில் காலை மற்றும் இரவு நேரத்தில் பஞ்சமூர்த்திகள் அலங்கார வாகனங்களில் வீதியுலா வந்து அருள்பாலிப்பது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு மாடவீதியில் சுவாமி வீதியுலா நடத்தினால், பக்தர்கள் கூட்ட நெரிசல் ஏற்படும். அதனால், அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் சுவாமி வீதியுலா நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பணி உபயதாரர்கள், முறைதாரர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களை மட்டும் கோயிலுக்குள் அனுமதிப்பது என ஆலோசிக்கப்பட்டு உள்ளது. அதையொட்டி, கோயில் 5ம் பிரகாரத்தில் இருந்த செடிகள், சிறிய மரக்கிளைகள் போன்றவை அகற்றும் பணி தற்போது நடந்து வருகிறது.

ஆனாலும், பெரிய ரிஷப வாகனம் உள்ளிட்ட சுவாமி திருவீதியுலா வாகனங்கள் 5ம் பிரகாரத்தில் வலம் வரும் வசதியிருக்கிறதா என்பது இன்னும் உறுதியாகவில்லை. சுவாமி திருவீதியுலாவுக்கு எந்தெந்த வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது என்பதும் இன்னும் உறுதியாக அறிவிக்கவில்லை.
மேலும், தீபத்திருவிழாவின் 7ம் நாளன்று (26ம் தேதி) மாடவீதியில் தேர் திருவிழா நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. தீபத்திருவிழா தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருவதால், விழா தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Tags : devotees ,Swami Veediula ,Thiruvannamalai Karthika Fire Festival ,Annamalaiyar Temple ,
× RELATED 16 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் தரிசனம்